பெங்களூருவில் தனது கணவரின் நண்பரையே காதலித்து, அவருடன் இளம்பெண் ஒருவர் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “அவர் எனக்கு அண்ணன் போன்றவர்” என்று கூறிவிட்டு, அதே நபருடன் மனைவி சென்றதால் கணவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த நிதேஷ் என்பவர் ஜிம் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் ஒரு பெண்ணைக் காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். நிதேஷும், நவீன் என்பவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, நண்பன் நவீனின் வீட்டிலேயே நிதேஷ் வாடகைக்குக் குடிபுகுந்துள்ளார்.

அப்போது, நவீனுக்கும் நிதேஷின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நவீனின் தொலைபேசி எண்ணை ஒரு பெண்ணின் பெயரில் தனது செல்போனில் சேமித்து வைத்துக்கொண்டு, அந்தப் பெண் ரகசியமாகச் சாட்டிங் செய்து வந்துள்ளார். இதுகுறித்துத் தெரிந்த நிதேஷ், மனைவியைக் கண்டித்ததுடன், அந்தப் பகுதியை விட்டு வெளியேறி வேறு  பகுதியில் குடியேறினார்.

இருப்பினும், அவர்கள் இருவருக்கும் இடையிலான தொடர்பு நீடித்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, வயிற்று வலி என்று கூறி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த மனைவி, தனது உடமைகளை எடுத்துக் கொண்டு காதலன் நவீனுடன் மாயமானார். இதுகுறித்து நிதேஷ் ஜெயநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான இருவரையும் தேடி கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு நடந்த விசாரணையில் அந்தப் பெண் அதிரடி முடிவை அறிவித்தார். “நான் எந்தக் காலத்திலும் கணவருடன் செல்ல மாட்டேன்; பிஜியிலேயே (PG) தங்கிக் கொள்கிறேன்” என்று பிடிவாதம் பிடித்தார்.

மேலும் தனது நண்பனே வீட்டிற்குள் புகுந்து துரோகம் செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிதேஷ், “எனக்கு நியாயம் வேண்டும்” என போலீசாரிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.