நிச்சயிக்கப்பட்ட மணமகன் மாயமானதால், அவசர அவசரமாக அவரது தம்பியை வைத்துத் திருமணம் முடித்துவிட்டு, விடியற்காலையில் மணப்பெண்ணை விட்டுவிட்டு மாப்பிள்ளை வீட்டார் மொத்தமாக ஓட்டம் பிடித்த வினோதச் சம்பவம் மிர்சாபூரில் அரங்கேறியுள்ளது. மிர்சாபூர் மாவட்டத்தின் கச்வா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் ஏப்ரல் 20-ஆம் தேதி (நேற்று முன்தினம்) நடைபெறுவதாக முடிவாகி, இரு வீடுகளிலும் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன.

திருமணத்திற்கு மூன்று நாட்களே இருந்த நிலையில், மணமகன் திடீரென மாயமானார். குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற நினைத்த மணமகனின் தந்தை, தனது இரண்டாவது மகனுக்குத் திருமணம் செய்து வைப்பதாகப் பெண் வீட்டாரிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவரும் உடல்நிலை சரியில்லை எனக் கூறி மறுத்துவிட்டார். மூன்றாவது மகனும் திருமணத்திற்கு உடன்படாத நிலையில், இறுதியில் நான்காவது மகனை “பலி ஆடாக” மாற்றித் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தார் தந்தை.

திட்டமிட்டபடி ஏப்ரல் 20-ஆம் தேதி பராத் ஊர்வலம் வந்தது. நான்காவது மகனுக்கும், அந்தப் பெண்ணுக்கும் முறைப்படி சடங்குகள் முடிந்து, அக்னி சாட்சியாக ஏழு சுற்றுகள் சுற்றித் திருமணம் நடைபெற்றது. பெண் வீட்டார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், மறுநாள் காலை (ஏப்ரல் 21) பெண் வீட்டார் விடைபெறும் சடங்கிற்காக மண்டபத்திற்குச் சென்றபோது அதிர்ச்சி காத்திருந்தது.

மண்டபத்தில் மணமகன், மாப்பிள்ளையின் தந்தை, உறவினர்கள் என ஒருவர்கூட இல்லை. அனைவரும் நள்ளிரவிலேயே ரகசியமாக அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், மாப்பிள்ளையின் தந்தையைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறிய பதில் இடியாய் இறங்கியது. “திருமணம் முடிந்துவிட்டது, ஆனால் விடைபெறும் சடங்கு இப்போது நடக்காது. மாயமான எனது மூத்த மகன் எப்போது திரும்பி வருகிறானோ, அப்போதுதான் அவனது மனைவியாக உங்களை அழைத்துச் செல்வோம்” என நிபந்தனை விதித்துள்ளார்.

ஒரு மகனுடன் தாலி கட்டிவிட்டு, மற்றொரு மகனுக்காகக் காத்திருக்கச் சொல்லும் இந்த விசித்திரமான மோசடியால் நிலைகுலைந்த பெண் வீட்டார், தற்போது காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சிவப்பு நிறத் திருமண உடையில் மணப்பெண் தனது பிறந்த வீட்டிலேயே நீதிக்காகக் காத்திருக்கிறார். மாவட்டத்தையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ள இந்த “மாயமான மணமகன்” விவகாரத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.