ஜிம்பாப்வேயில் உள்ள ஒரு பிரபலமான சொகுசு ஹோட்டலுக்குள் திடீரென 12 அடி நீளமுள்ள பிரம்மாண்ட நைல் நதி முதலை ஒன்று புகுந்த சம்பவம் உலகளவில் வைரலாகி வருகிறது.

விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள சாம்பேசி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஹோட்டலுக்குள், நதியிலிருந்து வெளியேறிய அந்த முதலை சாவகாசமாக நடந்து வந்துள்ளது.

அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்த்து மிரண்டு போன நிலையில், அந்த முதலை நேராக ரிசப்ஷன் கவுண்டருக்குச் சென்று அதன் மீது ஏற முயன்றது. ஹோட்டல் ஊழியர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாலும், சாமர்த்தியமாகச் செயல்பட்டு அந்தப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர்.

அங்கிருந்த ஒரு சுற்றுலாப் பயணி கூறுகையில், “இந்த முதலை பார்ப்பதற்கு ஏதோ ரூம் புக் செய்ய வந்த கெஸ்ட் போல நடந்து வந்தது. கவுண்டரில் ஆள் இல்லாததால், நேராக கிச்சனுக்குள் நுழையப் பார்த்தது. அங்கு சாப்பாடு எதுவும் கிடைக்காததால், அங்கிருந்த ஒரு சோஃபாவில் ஏறி அமர்ந்து கொண்டு ஜாலியாக ஓய்வெடுத்தது” என வியப்புடன் தெரிவித்தார்.

பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, கயிறுகள் மூலம் அந்த முதலையைப் பத்திரமாகப் பிடித்து மீண்டும் சாம்பேசி நதியிலேயே விட்டனர்.

இந்தச் சம்பவத்தை நகைச்சுவையாகக் கையாண்ட அந்த ஹோட்டல் நிர்வாகம், “எங்கள் சிறப்பு விருந்தினருக்கு ரூம் சர்வீஸ் தாமதமானதால் அவரே நேரில் வந்து விசாரித்தார்” எனச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.