அமெரிக்க-ஈரான் போர் நீண்டுகொண்டே செல்வதால், உலக அளவில் காண்டம்களின் விலை 20% முதல் 30% வரை உயரக்கூடும் என உலகின் மிகப்பெரிய காண்டம் உற்பத்தியாளரான ‘காரெக்ஸ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கோ மியா கியாட் எச்சரித்துள்ளார். போரின் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், காண்டம் தயாரிப்பிற்குத் தேவையான சிந்தடிக் ரப்பர், நைட்ரைல் மற்றும் லூப்ரிகண்டுகளுக்கான சிலிகான் ஆயில் போன்றவற்றின் மூலப்பொருள் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.

மேலும், கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் சரக்குக் கட்டணங்கள் உயர்ந்துள்ளதோடு, விநியோகச் சங்கிலியில் பெரும் தடைகளும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, உற்பத்திச் செலவில் ஏற்பட்டுள்ள கூடுதல் சுமையை வாடிக்கையாளர்களுக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் மலேசியாவைச் சேர்ந்த காரெக்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 500 கோடிக்கும் அதிகமான காண்டம்களை உற்பத்தி செய்து டியூரெக்ஸ், ட்ரோஜன் போன்ற முன்னணி பிராண்டுகளுக்கு வழங்குகிறது. தற்போது ஏற்பட்டுள்ள விநியோகத் தாமதத்தால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குச் செல்லும் சரக்குகள் வழக்கத்தை விட ஒரு மாதம் தாமதமாகச் சென்றடைகின்றன. இது ஒருபுறமிருக்க, போர்க்கால சூழலில் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையால் காண்டம்களுக்கான தேவை 30% வரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காலங்களில் மக்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க நினைப்பதால், குழந்தை பிறப்பைத் தள்ளிப்போட விரும்புவதே இந்தத் தேவை உயர்வுக்குக் காரணம் என்று காரெக்ஸ் சிஇஓ விளக்கியுள்ளார். இந்த விலையேற்றம் வளரும் நாடுகளில் உள்ள பொது சுகாதாரத் திட்டங்களையும், ஏழை எளிய மக்களின் பயன்பாட்டையும் பாதிக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.