பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரின் சமீபத்திய நடவடிக்கைகள், ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவில் கடும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பாகிஸ்தானில் உள்ள ஷியா பிரிவினரிடம், “ஈரானை அவ்வளவு பிடிக்கும் என்றால் அங்கேயே சென்றுவிடுங்கள்” என்று முனீர் கூறியது ஈரானை பெரும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் இது தவிர, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலில் பாகிஸ்தான் ஒரு நடுநிலை மத்தியஸ்தராக செயல்படுவதாகக் கூறிக்கொண்டாலும், கள நிலவரம் வேறாக உள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஏவுகணைத் திறன்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் முன்வைத்த 15 அம்சத் திட்டம், ஈரானின் இறையாண்மையைச் சீண்டும் விதமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது.

மறுபுறம், பாகிஸ்தான் அரசு டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுக்கு ஆதரவான ஒரு நிலப்பாட்டைத் தீவிரமாக எடுத்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. டிரம்ப் உருவாக்கிய ‘அமைதி வாரியத்தில்’ பாகிஸ்தான் இணைந்தது மற்றும் முனீரின் செயல்பாடுகளை டிரம்ப் பகிரங்கமாகப் பாராட்டியது ஆகியவை, பாகிஸ்தான் அமெரிக்காவின் முகவராகச் செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஈரான் தரப்பில் பலப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்திற்கு மத்தியில், முனீர் டிரம்பின் செய்திகளைத் தூதுவராகத் தெஹ்ரானுக்குக் கொண்டு செல்வது, ஈரானை இணங்கச் செய்வதற்கான ஒரு தந்திரமாகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய ஒருதலைப்பட்சமான அணுகுமுறை, பாகிஸ்தானை ஈரானின் பார்வையில் நம்பகத்தன்மையற்ற ஒரு நாடாக மாற்றியுள்ளது.