கும்பமேளாவில் வைரலான மோனலிசா போஸ்லே மற்றும் அவரது கணவர் முகமது ஃபர்மான் ஆகியோரை கைது செய்ய கொச்சிக்கு சென்ற மத்தியப் பிரதேச போலீசார், தற்போது வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர். மோனலிசா ஒரு மைனர் பெண் என்று அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ஃபர்மான் மீது போக்சோ சட்டம் மற்றும் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால், தான் ஒரு மேஜர் என்றும், தனது விருப்பப்படியே ஃபர்மானைத் திருமணம் செய்து கொண்டதாகவும் மோனலிசா கூறுகிறார். தற்போது தான் கர்ப்பமாக இருப்பதால் பயணிக்க முடியாது என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் திரும்பினர்.

இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் ஃபர்மானை கைது செய்ய மே 20-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், தன்னை வலுக்கட்டாயமாக மத்தியப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல போலீசார் முயல்வதாகவும், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மோனலிசா கடிதம் எழுதியுள்ளார். இந்தத் தம்பதியினர் கேரளாவில் தலைமறைவாக இருக்க உதவியதாகக் கூறப்படும் ஜோஷுவா என்பவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.