சமூக வலைதளங்களில் பெருகி வரும் போலி வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப விதிகளில் அதிரடியான புதிய திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. இதன்படி, இனி ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அந்த வீடியோவின் தொடக்கம் முதல் இறுதி வரை ‘AI Generated’ என்ற லேபிள் திரையில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
ஏஐ மூலம் உருவாக்கப்படும் வீடியோக்கள் பார்ப்பதற்கு அச்சு அசல் உண்மையான வீடியோக்கள் போலவே இருப்பதால், பொதுமக்கள் எளிதில் ஏமாற்றப்படும் சூழல் நிலவுகிறது. இதனைத் தவிர்க்கவும், வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த புதிய விதிமுறை கொண்டு வரப்படவுள்ளது.
சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் வீடியோ உருவாக்குபவர்கள் இந்த விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. டிஜிட்டல் தளங்களில் பாதுகாப்பை மேம்படுத்தவும், போலித் தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும் இது ஒரு மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
