முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில், பல நாடுகளின் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன் விளைவாக, சுமார் 15 லட்சம் கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா திரும்ப வழங்க உள்ளது. இதில் இந்தியாவின் பங்காக சுமார் 10 முதல் 12 பில்லியன் டாலர் வரை (இந்திய மதிப்பில் சுமார் 80,000 கோடி ரூபாய்க்கு மேல்) ரீஃபண்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவின் ஜவுளி, இன்ஜினியரிங் பொருட்கள் மற்றும் ரசாயனத் துறைகள் இந்த வரி விதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், இந்த ரீஃபண்ட் பணம் நேரடியாக இந்திய நிறுவனங்களுக்குக் கிடைக்காது என்பது ஒரு சிக்கலான விஷயமாக உள்ளது. அமெரிக்க சட்டப்படி, இறக்குமதி வரியைச் செலுத்திய அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே அந்தப் பணத்தைத் திரும்பக் கோர முடியும்.
எனவே, அமெரிக்காவிற்குப் பொருட்களை ஏற்றுமதி செய்த இந்திய நிறுவனங்கள், தங்களுக்கு வர வேண்டிய பணத்தைப் பெறுவதற்கு அந்த அமெரிக்க நிறுவனங்களுடன் வணிக ரீதியாகப் பேசித்தான் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த ரீஃபண்ட் செயல்முறை ஏப்ரல் 20 முதல் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 60 முதல் 90 நாட்களுக்குள் பணம் வழங்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
