சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று 2-வது நாளாகத் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பேசியதாவது,
தமிழகத்தில் நடைபெற்று வரும் ‘தீய’ திமுக ஆட்சியை அகற்றிவிட்டு, மீண்டும் அதிமுகவின் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். திமுக செய்துள்ள துரோகங்களும், மோசடிகளும் உலக வரைபடத்தின் பரப்பளவை விட நீளமானவை. மீண்டும் ஒருமுறை திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.
“பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத இந்த திமுக ஆட்சிக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீர்கள் என்று தாய்மார்களின் பாதம் தொட்டு நான் கேட்டுக்கொள்கிறேன். தபால் வாக்கு செலுத்தியவர்களில் 90 சதவீதம் பேர் அதிமுகவிற்கு வாக்களித்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, மக்கள் பேராதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார்.
தேமுதிக குறித்துப் பேசிய அவர், “விஜயகாந்த் கட்சி தொடங்கியதே திமுகவை எதிர்த்துதான். அந்தக் கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் இருந்தாலும், அவர் உண்மையில் நமது கூட்டணிக்காகத்தான் (அதிமுக-பாமக) வேலை செய்கிறார்; அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம். திருப்பரங்குன்றம் மலையில் மீண்டும் தீபம் ஏற்றப்படும் என அவர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது” எனத் தெரிவித்தார். மேலும் தேர்தல் நெருங்கும் வேளையில், எடப்பாடி தொகுதியில் அதிமுக – பாமக தலைவர்கள் இணைந்து மேற்கொண்டு வரும் இந்த பிரசாரம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
