யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வாழ்க்கை ஒரு சினிமா கதையை விடவும் வியப்பானது. தனது 10-வது வயதிலேயே கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவுடன் உத்திரபிரதேசத்திலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்த இவர், தங்குவதற்கு இடமின்றி கடும் அவதிப்பட்டார்.
மேலும் பல இரவுகளை ஆசாத் மைதானத்தில் உள்ள கூடாரங்களில் கழித்த ஜெய்ஸ்வால், தனது அன்றாட உணவுத் தேவைகளுக்காகவும் கிரிக்கெட் பயிற்சியைத் தொடரவும் தெருக்களில் கோல்கப்பா விற்றுப் பிழைப்பை நடத்தினார். கடும் வறுமையும் தனிமையும் அவரை வாட்டிய போதிலும், தனது லட்சியத்திலிருந்து அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை.
இதனால் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத தொடக்க வீரராக உருவெடுத்துள்ள ஜெய்ஸ்வால், தனது விடாமுயற்சியால் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் முத்திரை பதித்தவர், தற்போது சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் ரன்களைக் குவித்து வருகிறார்.
இந்நிலையில் மும்பை தெருக்களில் பானிபூரி விற்ற ஒரு சிறுவன், இன்று இந்திய நீல நிறச் சீருடையில் மைதானத்தை ஆள்வது கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு மாபெரும் நம்பிக்கையாகத் திகழ்கிறது. “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பதற்கு ஜெய்ஸ்வால் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
