சீனாவின் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் காலமானார். சொகுசு கார்கள் மீது அதீத பிரியம் கொண்ட அவருக்கு, ஒரு மறக்க முடியாத விடைபெறலைத் தர வேண்டும் என அவரது மகன்கள் முடிவு செய்தனர். அதன்படி, சுமார் ₹1.5 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் S450L காரையே அவருக்குப் சவப்பெட்டியாக மாற்றினர்.

அந்த காரில் ‘8888’ என்ற சீனாவில் அதிர்ஷ்டமாகக் கருதப்படும் விஐபி நம்பர் பிளேட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு புதிய காரை டெலிவரி எடுப்பது போல, அந்த காரை சிவப்புத் துணிகளால் அலங்கரித்து, தந்தையின் உடலை உள்ளே வைத்துப் பெரிய பள்ளம் தோண்டிப் புதைத்தனர்.

இந்த விசித்திரச் செயல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, அடுத்த நாளே சீன அதிகாரிகள் அதிரடியாகக் களத்தில் இறங்கினர். “இது வெறும் மூடநம்பிக்கை மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” எனக் கூறி, புதைக்கப்பட்ட காரைத் தோண்டி எடுக்க உத்தரவிட்டனர்.

அரசின் கிடுக்கிப்பிடி உத்தரவால், அந்த குடும்பத்தினர் காரைத் தோண்டி எடுத்துவிட்டு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டனர். மேலும், இந்தச் செயலுக்காக அவர்களுக்குப் பெரும் தொகையை அபராதமாகவும் விதித்துள்ளது சீன அரசு. “இறந்த பிறகு செய்த புண்ணியம் தான் கூட வருமே தவிர, பென்ஸ் கார் வராது” என நெட்டிசன்கள் இந்தக் குடும்பத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.