பராமரிப்புத் தொகை வழங்குவதிலிருந்து தப்பிக்க நினைக்கும் கணவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. தனது பொருளாதார நிலை சரியில்லை எனக் கூறி, மனைவி மற்றும் குழந்தைகளுக்குப் பராமரிப்புத் தொகை வழங்க முடியாது என கணவன் ஒருவன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.

“பொருளாதார ரீதியாக என்னால் குடும்பத்தைக் கவனிக்க முடியாது என ஒருவருக்குத் தோன்றினால், அவர் திருமணமே செய்துகொள்ளக் கூடாது” என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

“ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால், சட்டப்படி அந்தப் பெண்ணைப் பராமரிக்கும் பொறுப்பு அந்த ஆணுக்கு உண்டு. வேலை இல்லை என்றோ அல்லது வருமானம் இல்லை என்றோ கூறி தப்பிக்க முடியாது” என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒரு ஆணின் உடல்நிலை நன்றாக இருக்கும் பட்சத்தில், அவர் உழைத்துத் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது சட்டரீதியான கடமை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கணவர்களின் இத்தகைய பொறுப்பற்ற வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் தீர்ப்பு, இப்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது.