உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் கித்வாய் நகரில் உள்ள திரிமூர்த்தி அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வருபவர் சசி ரஞ்சன் மிஸ்ரா. இவருக்கு ரேஷ்மா என்ற மனைவியும், இரண்டு இரட்டைப் பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், சசி ரஞ்சன் தனது இரண்டு குழந்தைகளையும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணவன் – மனைவி இடையே நீண்ட நாட்களாகத் தீராத குடும்பத் தகராறு இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இவர்கள் இருவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்துள்ளனர்.
ஆனால், நீண்ட காலமாக இருவரும் பேசிக்கொள்வது கிடையாது என்பதோடு, ஆளுக்கொரு அறையில்தான் தங்கியிருந்துள்ளனர். இதற்குக் காரணம், சசி ரஞ்சனுக்கு சண்டிகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இருந்த கள்ளத்தொடர்புதான் என அவரது மனைவி ரேஷ்மா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொரோனா காலத்திற்குப் பிறகு சண்டிகருக்கு வேலை நிமித்தமாகச் சென்ற சசி ரஞ்சன், அங்கு ஒரு பெண்ணுடன் நெருக்கமானதால் தனது குடும்பத்தை அடியோடு வெறுக்கத் தொடங்கியுள்ளார். இந்தக் கள்ளக்காதல் மோகமே தற்போது இரண்டு பிஞ்சு உயிர்களைப் பறிக்கும் அளவிற்குச் சென்றுள்ளது. தலைமறைவான தந்தையை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
