தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தேர்தல் களம் பெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தனது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது திரைப் பிரபலங்களும் தவெக-வுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். அந்த வகையில், சென்னை வேளச்சேரி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.குமாரை ஆதரித்து பிரபல நடிகர் ஜெய் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

​வேளச்சேரியின் முக்கிய வீதிகள் வழியாக வேட்பாளருடன் நடந்து சென்ற நடிகர் ஜெய், பொதுமக்களிடம் “நம்ம தளபதியின் கட்சிக்கு வாக்களியுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார். நடிகரைக் கண்டதும் உற்சாகமடைந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்குச் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடிகர் ஜெய் பிரச்சாரம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.