தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அரசியல் களத்தில் கட்சித் தாவல்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைவு விழாவால், தொகுதி தேர்தல் களம் பெரும் பரபரப்பைக் கண்டுள்ளது.

​தேர்தல் நெருங்கும் வேளையில் தவெக-விலிருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இளைஞர்கள் வெளியேறியது விஜய் தரப்பிற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் அவர்களுக்குச் சால்வை அணிவித்து வரவேற்றதோடு, தேர்தல் பணிகளில் அவர்களைத் தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளார். இந்த அதிரடி மாற்றத்தால் வில்லிவாக்கம் தொகுதியில் திமுகவின் கை ஓங்கியுள்ளதாக உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர்.