காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. இதனை அடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்மலிங்கம் தலைமையிலான குழுவினர் அங்கு அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ₹13.40 லட்சம் ரொக்கப் பணத்தைக் கண்டுபிடித்த அதிகாரிகள், அதைப் பறிமுதல் செய்தனர்.

​பறிமுதல் செய்யப்பட்ட பணத்தைக் கருவூலத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்டபோது, அங்குத் திரண்டிருந்த சிலர் அதிகாரிகளின் கையிலிருந்த பணப்பையைப் பறித்துக்கொண்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடியவர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து உதவி ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் மற்றும் ஏஎஸ்பி ஆஷிஷ் புனியா ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.