தருமபுரி தொகுதியில் போட்டியிடும் தனது மருமகள் சௌமியா அன்புமணியை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை காரணமாகப் பரப்புரைக்குச் செல்ல முடியாத நிலையில், காணொளி மூலம் பேசிய அவர், சௌமியாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். பணத்துக்காகவும், அதிகாரத்தைப் பிடிப்பதற்காகவுமே அவர் தேர்தலில் போட்டியிடுவதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

​தொடர்ந்து பேசிய ராமதாஸ், நாடாளுமன்றத்திற்கே சரியாகச் செல்லாத அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினரை “துரோக கும்பல்” என்று கடுமையாக விமர்சித்தார். தருமபுரி மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். பாமக-விற்குள்ளேயே ஏற்பட்டுள்ள இந்த உச்சக்கட்டக் குடும்பப் பூசல் மற்றும் ராமதாஸின் இந்த அதிரடி வீடியோ வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தருமபுரி தேர்தல் களத்தையே தலைகீழாக மாற்றியுள்ளது.