ஈரான் தனது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களைத் தாக்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதல் நாகரிகமற்ற செயல் என்று குறிப்பிட்ட அவர், ஈரானின் இத்தகைய நடவடிக்கைகளால் அமெரிக்காவிற்கு எந்த இழப்பும் இல்லை என்றும், மாறாக பல கப்பல்கள் தற்போது சரக்குகளை ஏற்ற அமெரிக்காவை நோக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதால் ஈரானுக்குத் தான் தினமும் 50 கோடி டாலர் நஷ்டம் ஏற்படும் என்றும், பேச்சுவார்த்தைக்காகத் தனது பிரதிநிதிகள் பாகிஸ்தான் செல்வதாகவும் அவர் கூறினார். ஈரானுக்கு ஒரு நியாயமான ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், அதை அவர்கள் ஏற்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
ஒப்பந்தத்தை மறுத்தால் ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையம் மற்றும் பாலத்தை அமெரிக்கா தகர்க்கும் என்றும், இனி “நல்லவர் வேஷம்” போடப்போவதில்லை என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
கடந்த 47 ஆண்டுகளாக மற்ற அதிபர்கள் செய்யத் தவறிய காரியத்தை தான் செய்யப்போவதாகவும், ஈரானின் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இதுவே சரியான நேரம் என்றும் டிரம்ப் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
