விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பட்டாசு ஆலையில், இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு பெரும் வெடி விபத்து நிகழ்ந்தது. வீரியம் மிகுந்த வெடிபொருள் மருந்தை கையாளும்போது இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தின் வீரியத்தால் அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் ஆலையின் 4 உற்பத்தி அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் அந்த ஆலையில் கிட்டத்தட்ட 30 பேர் பணியாற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில் 18 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரிக்கிறது. தற்போது உயிரிழப்பு 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
