தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி பரப்புரைக்காக இன்று நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து சென்னை விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டார். விஜய்யைக் காணவும், அவரது காரைப் பின்தொடரவும் ஏராளமான ரசிகர்கள் பைக்குகளில் திரண்டதால் நீலாங்கரை முதல் விமான நிலையம் வரை பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது, விஜய்யின் காரை மிக நெருக்கமாகப் பின்தொடர்ந்து சென்ற ஒரு இளைஞர், எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையிலேயே கீழே விழுந்தார்.

பின்னால் வந்த வாகனங்கள் மோதாமல் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். விழுந்த வேகத்திலேயே சுதாரித்து எழுந்த அந்த இளைஞர், மீண்டும் தனது பைக்கை எடுத்துக் கொண்டு விஜய்யின் காரை நோக்கியே வேகமாகச் சென்றது அங்கிருந்தவர்களைத் திகைக்க வைத்தது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.