“மனம் இருந்தால் மார்க்கமுண்டு” என்பதற்குச் சான்றாக, பிறவிலேயே கைகால்கள் இல்லாத நிலையிலும், தனது அசாத்திய தன்னம்பிக்கையால் மூன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய 81 வயது சீனத் தாய் வாங் யுஷியின் கதை இணையத்தில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவிலுள்ள கான்சு மாகாணத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த இவருக்கு, பிறப்பிலிருந்தே கைகால்கள் கிடையாது.
வறுமை மற்றும் உடல் ஊனம் காரணமாக சுமார் 20 வயது வரை இவருக்கு முறையான பெயரே சூட்டப்படவில்லை. 27 வயதில் தான் ‘வாங் யுஷி’ என்ற பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு, கணவர் வேலைக்காக வெளியூர் சென்ற நிலையில், தனது மூன்று குழந்தைகளையும் தனியாளாகப் போராடி வளர்த்துள்ளார். கைகால்கள் இல்லையென்றாலும், வாயால் தையல் தைப்பது, உடலால் மாவு பிசைவது, முழங்கைகளுக்கு இடையே குச்சிகளை வைத்துச் சாப்பிடுவது எனத் தனக்கென ஒரு தனி வழியை உருவாக்கி வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துள்ளார்.
“வாழ்க்கை கடினமாக இருந்தது, ஆனால் என் குடும்பத்தை ஒருபோதும் நான் பசியோடு இருக்கவிட்டதில்லை” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தற்போது தனது கடைசி மகனுடன் வசித்து வரும் இவரை, சீன நெட்டிசன்கள் “நாட்டின் வலிமையான தாய்” என்று கொண்டாடி வருகின்றனர்.
