மேற்காசிய நாடான ஐக்கிய அரபு அமீரகம் தனது போக்குவரத்து வசதிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் துபாயில் புதிய ‘ஏர் டாக்ஸி’ நிலையத்தை அமைத்துள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே சுமார் 3,100 சதுர மீட்டர் பரப்பளவில் மிக நவீனமாக இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் செங்குத்தாக தரையிறங்கும் வசதி, அதிவேக சார்ஜிங் மற்றும் பயணிகளுக்கான சொகுசு ஓய்வறைகள் என அனைத்து வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் சாலை வழியாக 45 நிமிடங்கள் ஆகும் பயண தூரத்தை வெறும் 10 நிமிடங்களில் கடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஏர் டாக்ஸி சேவையை மக்கள் தங்கள் மொபைல் செயலி மூலமே எளிதாக முன்பதிவு செய்து கொள்ள முடியும். முதற்கட்டமாக விமான நிலையங்கள், முக்கிய ஹோட்டல்கள் மற்றும் வணிக மையங்களுக்கு இடையே இந்த சேவை தொடங்கப்பட உள்ளது.

துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் சமீபத்தில் இந்த நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி முடிந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த ஏர் டாக்ஸி சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது