நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இன்று (ஏப். 18) இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.
“உங்களின் கனவுகளை நனவாக்கப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து முயற்சி செய்தும், சில அரசியல் சக்திகளால் அது இன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மசோதா வீழ்த்தப்பட்டபோது காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி போன்ற வாரிசு அரசியல் கட்சிகள் மேஜையைத் தட்டி அதைக் கொண்டாடியது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது” என்று அவர் ஆவேசமாகச் சாடினார்.
இந்தச் செயலை “பெண் சிசுக்கொலைக்கு” (Foeticide) நிகரான பாவம் என்று வர்ணித்த பிரதமர், எதிர்க்கட்சிகள் பெண்களின் அதிகாரமளிப்பைப் பார்த்துப் பயப்படுவதாகவும், பெண்களின் உரிமையைப் பறித்ததற்காக அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.
“நேற்று எங்களுக்குப் போதிய பலம் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்களின் உறுதி குறையவில்லை. இந்தியப் பெண்களின் உரிமைகளைப் பெற்றுத் தரும் வரை ஓயமாட்டோம், தடைகளைத் தகர்த்து இந்த மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்று நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி உறுதி அளித்தார். இந்த உணர்ச்சிகரமான உரை தற்போது இந்திய அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
