ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். செங்கோட்டையன் திமுகவின் ‘பி டீம்’ ஆகவும், உளவாளியாகவும் மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், பள்ளி விழாக்களில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் படங்களை வைத்தபோதே அவர் அதிமுகவை குழிதோண்டி புதைக்கத் தொடங்கிவிட்டார் என்று சாடினார்.
மேலும், சட்டமன்றத்தில் ஒருமுறை கூட திமுகவை எதிர்த்துப் பேசாத செங்கோட்டையன் மன்னிக்க முடியாத நபர் என்றும், அவரை இந்தத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்யவேண்டும் என்றும் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
செங்கோட்டையனின் சொத்து விவரங்கள் மற்றும் குடும்பப் புகார்கள் குறித்தும் பேசிய எடப்பாடி பழனிசாமி, சாதாரண நிலையில் இருந்து அவர் எப்படிப் பெரும் பணக்காரரானார் என்பது மக்களுக்குத் தெரியும் என்று குறிப்பிட்டார்.
ஜெயலலிதா காலத்திலேயே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையும், பின்னர் அவர் அழுது கேட்டதால்தான் தனது அமைச்சரவையில் சேர்த்ததாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒரு தோல்வியுற்ற அரசு என்றும், “தமிழகத்தை மீட்போம், மக்களைக் காப்போம்” என்ற முழக்கத்துடன்அதிமுக மீண்டும் வெற்றி பெற்று வரும் என்றும் உறுதியளித்தார்.
