தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குக சேகரிக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரிக்குச் சென்று அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தேர்தல் பிரசாரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பொன்னேரி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், தமிழ் மண்ணைச் சேர்ந்தவனாகவே உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சாட்டிய அவர், தமிழர்களின் எதிர்காலத்தைத் தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றார்.
மேலும், தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி செய்வதாகவும், டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள நினைக்கும் அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார்.
