கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே சூரியன் தனது உக்கிரத்தைக் காட்டத் தொடங்கிவிட்ட நிலையில், மனிதர்களாகிய நமக்கே தாகம் தாங்கவில்லை. அப்படியிருக்க, சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு சொட்டுத் தண்ணீருக்காக ஊர் ஊராக அலையும் வாயில்லா ஜீவன்களின் நிலை? இதை உணர்ந்த அஜய் தாக்கூர் என்ற 23 வயது இளைஞர், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ ஒட்டுமொத்த இணையதளவாசிகளின் இதயங்களையும் வென்றுள்ளது.
அந்த வீடியோவில், தாகத்தோடு வரும் ஒரு பசு மாடு, காய்ந்து கிடக்கும் அழுக்குத் தொட்டியைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்புவதைக் கண்டு மனமுடைந்த அஜய், தனது நண்பர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கினார். பாசி பிடித்து, சேறும் சகதியுமாக இருந்த அந்தத் தண்ணீர் தொட்டியைத் தேய்த்துக் கழுவி, வர்ணம் பூசி, டேங்கர் லாரி மூலம் சுத்தமான தண்ணீரை நிரப்பினார்.
View this post on Instagram
நிரம்பி வழியும் அந்தத் தொட்டியில் பசுக்கள் தாகம் தீரத் தண்ணீர் குடிக்கும் காட்சி, பார்ப்பவர்களின் கண்களில் ஈரத்தை வரவழைக்கிறது. கடந்த எட்டு மாதங்களாகத் தனது முழு நேரத்தையும் இது போன்ற பணிகளுக்காகச் செலவிடும் அஜய், இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் மற்றும் பறவைகளின் தாகத்தைத் தீர்த்துள்ளார்.
“சமூக வலைதளங்களில் தேவையற்ற நடன வீடியோக்களைப் பதிவிடுபவர்களுக்கு மத்தியில், இயற்கையையும் சக உயிர்களையும் நேசிக்கும் இந்த இளைஞரே உண்மையான சூப்பர் ஸ்டார்” என நெட்டிசன்கள் பாராட்டித் தள்ளுகின்றனர்.
சிமெண்ட் காடுகளாக மாறி வரும் நகரங்களில், நம் வீட்டு பால்கனியிலோ அல்லது மொட்டை மாடியிலோ ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைப்பதன் மூலம், நாமும் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதை இந்த வீடியோ ஆழமாக உணர்த்துகிறது.
