நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காதலைக் கைவிட மறுத்த வாலிபர், காதலியின் தந்தை மற்றும் சகோதரரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கக்கன்நகர் பகுதியைச் சேர்ந்த வினி ஆண்டோ என்ற ஆட்டோ டிரைவர், அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகளைக் காதலித்து வந்துள்ளார்.

இந்தத் தொடர்பை ரவிச்சந்திரன் கடுமையாக எதிர்த்ததுடன், காதலைக் கைவிடுமாறு பலமுறை வினி ஆண்டோவை எச்சரித்துள்ளார். இருப்பினும், அவர் காதலைத் தொடர்ந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது 17 வயது மகன் ஆகிய இருவரும் சேர்ந்து வினி ஆண்டோவை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குன்னூர் மற்றும் ஊட்டி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அருவங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ரவிச்சந்திரன் மற்றும் அவரது மைனர் மகனை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.