ஹைதராபாத் போடுப்பல் பகுதியில் குடும்பப் பொறாமை காரணமாக 4 வயது சிறுவனை ஆசிட் குடிக்க வைத்து கொல்ல முயன்ற சித்தியின் செயல் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது. மஞ்சுளா என்ற அந்தப் பெண், தனது கணவரின் சகோதரர் மகனான 4 வயது சிறுவனிடம், சாக்லேட் தருவதாக ஆசை காட்டி சமையலறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு பழச்சாறு எனக் கூறி ஆசிட்டை குடிக்கக் கொடுத்துள்ளார். அதனை நம்பிக் குடித்த சிறுவன் அலறித் துடிக்கவே, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக 3 நாள் சிகிச்சைக்குப் பின் சிறுவன் உயிர் தப்பினார். இந்தக் கொடூரச் செயலுக்குப் பின்னால் இருக்கும் காரணம் காவல்துறையினரை அதிர வைத்துள்ளது.

மஞ்சுளாவின் மாமனார் மற்றும் மாமியார், அவரது குழந்தையை விட இந்தச் சிறுவன் மீது அதிக பாசம் காட்டியது மஞ்சுளாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தாத்தா அந்தச் சிறுவனின் பெயரைப் பச்சை குத்திக் கொண்டது மஞ்சுளாவை வெறியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.

இதற்கு முன்னரும் அந்தச் சிறுவனை மூச்சுத் திணறடித்தும், மொட்டை மாடி கைப்பிடி சுவரில் அந்தரத்தில் உட்கார வைத்தும் மஞ்சுளா சித்ரவதை செய்தது விசாரணையில் அம்பலமானது. தற்போது மஞ்சுளா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து மேடிப்பள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.