கோபி தொகுதியில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, கே.ஏ. செங்கோட்டையனை ஒருமையில் கடுமையாக விமர்சித்தார். தன்னிடம் அமைச்சர் பதவி கேட்டு செங்கோட்டையன் கண்ணீர் விட்டு கதறி அழுததாகக் குறிப்பிட்ட அவர், செங்கோட்டையன் ஒரு அகங்காரம் மற்றும் திமிர் பிடித்தவர் என்றும் சாடினார். செங்கோட்டையன் ஒரு மோசமான ஆள் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே ஏற்கனவே தன்னிடம் கூறியிருப்பதாகத் தெரிவித்த இ.பி.எஸ், “ஜாக்கிரதையாகப் பேசவில்லை என்றால் பச்சையாகப் பேசுவேன், அசிங்கமாகிவிடும்” எனப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

​மேலும், ஒரு புகைப்படத்தை ஆதாரமாகக் காட்டிய எடப்பாடியார், செங்கோட்டையனை தி.மு.க-வின் உளவாளி எனச் சாடினார். ஒரு மூத்த நிர்வாகியை மேடையிலேயே எடப்பாடி பழனிசாமி ஒருமையில் பேசி எச்சரித்தது அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்திலேயே அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.