உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக ‘ஆபரேஷன் ஒயிட் பவுடர்’ என்ற பெயரில் காவல்துறையினர் அதிரடி சோதனையை நடத்தினர்.

கான்பூர் காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வேட்டையில், முதன்முறையாக ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. குறுகிய சந்துகள் மற்றும் வீடுகளின் கூரைகளில் மறைந்து போதைப்பொருள் விற்பனை செய்தவர்களை ட்ரோன் மூலம் துல்லியமாக கண்டுபிடித்தனர்.

சுமார் 70 போலீஸ்காரர்கள் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து நடத்திய இந்த சோதனையில், 7 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சோதனையின் போது 3 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மற்றும் 92 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பகுதியில் மட்டும் ஒரு நாளைக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை கஞ்சா விற்பனை நடைபெற்று வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் உள்ள போதைப்பொருள் கும்பல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள முக்கிய தலைவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.