இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படும் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பெண் சக்திக்கு அதிகாரமளிப்பதன் மூலம் தேசத்திற்குப் புதிய வழியைக் காட்டுகிறோம்.

மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது காலத்தின் கட்டாயம்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவை நிறைவேற்றக் கிடைத்துள்ள வாய்ப்பு தமக்குக் கிடைத்த பாக்கியம் என்றும், இந்தியத் திருநாட்டின் பெருமைமிக்க தருணம் இது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

 

அதேவேளையில், மசோதாக்களை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளைப் பிரதமர் மோடி மிகக் கடுமையாகச் சாடினார். “பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதைத் தடுப்பவர்களைக் காலம் ஒருபோதும் மன்னிக்காது. இந்தத் துரோகத்தை இந்தியப் பெண்களும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என எச்சரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சிகள் பலவும் தனிப்பட்ட முறையில் தன்னிடம் ஆதரவு தெரிவித்துவிட்டு, அரசியல் காரணங்களுக்காகப் பொதுவெளியில் எதிர்ப்புத் தெரிவிப்பதாக அவர்களின் ‘இரட்டை வேடத்தை’ அம்பலப்படுத்தினார். பிரதமர் மோடியின் இந்த அதிரடி உரை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு குறித்த அடுத்தடுத்த நகர்வுகள், டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.