80 மற்றும் 90-களில் கிராமத்து பெண்களின் கனவு நாயகனாக, வசூல் மன்னனாகத் திகழ்ந்த ‘மக்கள் நாயகன்’ ராமராஜன், திடீரென தமிழக வெற்றிக் கழக வேட்பாளருக்கு ஆதரவாக ஆலங்குளத்தில் பிரசாரம் செய்தது ஒட்டுமொத்த தமிழகத்தையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாகத் தன்னைக் காட்டிக்கொண்டு, அதிமுக-வின் எம்பியாகவும் வலம் வந்தவர் ராமராஜன்.
ஆனால், தற்போது த.வெ.க வேட்பாளருக்கு ஆதரவாக அவர் வாக்கு கேட்டது பெரிய பரபரப்பைக் கிளப்பியது. இதுகுறித்து மனம் திறந்த ராமராஜன், “2011 மற்றும் 2016-ல் ஜெயலலிதா அம்மையாருக்காகத் தமிழகம் முழுவதும் சுழன்று சுழன்று பிரசாரம் செய்தேன். ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு கட்சியில் எனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
தேர்தல் நேரத்தில் மட்டும் என்னைப் பயன்படுத்திக் கொண்டு மற்ற நேரங்களில் கழற்றிவிட்டனர்” என அதிமுக தலைமை மீதுள்ள தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காகத் தான் விஜய்யின் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், இது முழுக்க முழுக்க ஒரு ‘நன்றிக்கடன்’ என்றும் ராமராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
தனது 45-வது படமான ‘சாமானியன்’ திரைப்படம் ஆலங்குளத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, ஏழை மக்களுக்காகத் தியேட்டர் டிக்கெட் விலையை ரூ.50 ஆகக் குறைத்த உரிமையாளரின் உறவினருக்காகவே தான் வாக்கு சேகரித்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதேபோல், சினிமாவுக்குப் போக தனக்கு உதவி செய்த மதுரை மேலூர் தியேட்டர் உரிமையாளரின் மகனுக்கும் பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
“விஜய்யின் எதிர்காலம் குறித்து மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்” என நாசூக்காகப் பதிலளித்த ராமராஜனின் இந்த அதிரடி நகர்வு, அதிமுக கூடாரத்தைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
