மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ் (TCS)-இல் பணியாற்றும் இளம்பெண் ஒருவர், மதமாற்ற முயற்சிக்கும், சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் இந்தியாவையே அதிரவைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவல்கள் பெற்றோரை மட்டுமல்லாது விசாரணை முகமைகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டில் இருந்த சாமி படங்கள் மற்றும் சிலைகளை உடனடியாக அகற்றுமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், தனது மகளுக்கு ஏதோ நேர்ந்துள்ளது என்பதை உணர்ந்து விசாரிக்கத் தொடங்கினர். அப்போதுதான், அலுவலகத்தில் அவர் மூளைச்சலவை செய்யப்பட்டு, ஒரு கும்பலின் பிடியில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்ட பெற்றோர், போலீஸில் புகார் அளித்தனர்.

இந்த விவகாரத்தின் தீவிரம் கருதி, மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) விசாரணையைத் கையில் எடுத்துள்ளது. இது ஒரு அலுவலகப் பிரச்சினை மட்டுமல்ல, இதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய மற்றும் திட்டமிட்ட மதமாற்ற நெட்வொர்க் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. டெல்லியில் இருந்து வந்த உயர் மட்ட மேலாண்மை குழு, நாசிக் அலுவலகத்தில் தீவிர உள்விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 150 ஊழியர்களை ‘Work From Home’ செய்ய நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

ஊழியர்களின் புகார்களை அலட்சியப்படுத்தியதாக மனிதவளத் துறை (HR) மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அவர்களின் பங்கும் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அலுவலகம் கிட்டத்தட்ட காலியாக இருந்த நிலையில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேசிய மகளிர் ஆணையம் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

மேலும் இந்த நெட்வொர்க்கில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய பெண் அதிகாரி வலைவீசி தேடப்படுகிறார். இவர்கள் பெண்களை பலாத்காரம் செய்து மதமாற்றம் செய்ய வற்புறுத்திய நிலையில் ஆண்களையும் கட்டாயம் மதமாற்றத்திற்கு வற்புறுத்தியது தெரியவந்துள்ளதால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் விரிவான விசாரணைகள் நடைபெறுகிறது.