சேலத்தில் நடைபெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய மநீம தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கமல்ஹாசன், தான் பதவியையோ நாற்காலியையோ தேடி வரவில்லை என்றும், திராவிடக் கொள்கையைப் பாதுகாக்கும் பல்லக்கைத் தூக்கும் ஒரு தோளாகவே இங்கு வந்துள்ளேன் என்றும் உணர்ச்சிபொங்கப் பேசினார்.

திராவிடம் என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடங்கியது அல்ல, அது நாடு தழுவியது என்பதை வலியுறுத்திய அவர், இன்று நடக்கும் மக்கள் சார்பு இல்லாத போலி அரசியலை எதிர்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது என்றார்.

மேலும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை தூண்டில் முனையில் வைக்கப்பட்ட சின்ன மீனாகவே தான் பார்ப்பதாகவும், மக்களின் கல்வியறிவைப் பயன்படுத்தி இத்தகைய சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தனது அரசியல் பயணம் குறித்துப் பேசிய கமல், 21 வயதில் கலைஞர் கருணாநிதி தன்னை திமுகவில் சேர அழைத்தபோது பதில் சொல்லத் தயங்கியதாகவும், ஆனால் இன்று அதே திராவிடக் குடும்பத்தில் ஒருவனாக இணைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகம் பல்வேறு துறைகளில் முதலிடத்தில் இருப்பதை மற்றவர்கள் கசப்புடன் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என்ற அவர், முதல்வர் ஸ்டாலினின் அரவணைக்கும் பண்பைப் பாராட்டிப் பேசினார்.

“நாளை நமதே” என்பது ஒரு கட்சிக்கு மட்டுமான முழக்கம் அல்ல, அது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் சேர வேண்டிய வெற்றி என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.