பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் சமாதானத்தில் முடிந்தது. ஒருவரது வளர்ப்பு ஆண் பூனை, பக்கத்து வீட்டுப் பெண் பூனையுடன் இணைந்ததில் நான்கு குட்டிகள் பிறந்தன. இந்தக் குட்டிகளை வளர்க்கும் பொறுப்பை ஆண் பூனையின் உரிமையாளர் தான் ஏற்க வேண்டும் என்று பெண் பூனையின் உரிமையாளர் பிடிவாதம் பிடித்தார்.

இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, நிலைமை மோசமானதால் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி ஒரு சுமுகமான முடிவை எடுத்தனர். அதன்படி, பூனைக்குட்டிகளை இரு வீட்டாரும் வளர்க்க வேண்டிய அவசியமில்லை என்றும், அவற்றை ஒரு மூன்றாம் நபரிடம் ஒப்படைக்கலாம் என்றும் யோசனை கூறினர்.

இதற்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்ததை அடுத்து குட்டிகள் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டன. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பூனைக்குட்டிகளைத் தாயிடமிருந்து இவ்வளவு சீக்கிரம் பிரித்தது தவறு என்றும், செல்லப் பிராணிகளுக்குக் கருத்தடை செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.