அமெரிக்காவின் சான் டியாகோ நகரில், பார்க்கிங் ஊழியர் ஒருவரைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்ற 20 வயது இளைஞரை, போலீஸ் நாய் உதவியுடன் அதிகாரிகள் கைது செய்துள்ள அதிரடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சான் டியாகோவின் ‘டைல்கேட் பேட்ரஸ்’ பார்க்கிங் தளத்தில் பணியாற்றி வந்த 25 வயது ஊழியரை, லாதாபவுன் கியோவோங்சா என்ற வாலிபர் மரக்கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

 

இதில் அந்த ஊழியரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். காயமடைந்த ஊழியர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சுமார் 6 அடி நீளமுள்ள தடியுடன் நின்றிருந்த கியோவோங்சாவைச் சரணடையுமாறு எச்சரித்தனர்.

ஆனால், அவர் போலீஸாரின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் மிரட்டல் விடுத்தார். முதலில் உயிரிழப்பை ஏற்படுத்தாத ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி போலீஸார் அவரைத் தடுக்க முயன்றனர். அப்போதும் அவர் அடங்காததால், பயிற்சி அளிக்கப்பட்ட போலீஸ் நாய் களமிறக்கப்பட்டது. அந்த நாய் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று கியோவோங்சாவின் கையைப் பிடித்துக் கவ்வியது.

இதில் நிலைதடுமாறிய அவரை போலீஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் போலீஸ் நாயின் துல்லியமான செயல்பாட்டைப் பலரும் பாராட்டி வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.