அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினமான ஜூலை 4, 2026-ஐ முன்னிட்டு, ஓராண்டு கால நாடு தழுவிய கொண்டாட்டங்களை ‘Freedom 250’ என்ற பெயரில் இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தொடங்கியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவின் அடையாளங்கள் பொறிக்கப்பட்ட வண்ணமயமான ஆட்டோ ரிக்‌ஷாக்களை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் அறிமுகம் செய்து வைத்தார். “இந்தச் சிறப்புப் பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

 

அமெரிக்காவின் 250-வது ஆண்டைக் கொண்டாடும் அதே வேளையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவின் வலிமையையும் இதன் மூலம் கௌரவிக்கிறோம்” என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த ‘ஆட்டோ ரிக்‌ஷா’ அரசியல் சமூக வலைதளங்களில் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் மெட்ரோ ரயில்கள், எலக்ட்ரிக் பேருந்துகள் என நவீன வளர்ச்சிகள் இருக்கும்போது, மேலை நாட்டினர் ஏன் எப்போதும் இந்தியாவின் வறுமையைக் குறிக்கும் பிம்பமாக ஆட்டோக்களை மட்டுமே முன்னிறுத்துகிறார்கள் என இந்திய நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“ஏன் அமெரிக்கக் கொடிகள் இந்தியாவில் பறக்கவிடப்படுகின்றன? இதேபோல் இந்தியக் கொடிகளை உங்கள் நாட்டில் நாங்கள் பறக்கவிட்டால் உங்கள் எதிர்வினை எப்படி இருக்கும்?” என ஒரு பயனர் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்த தூதர் செர்ஜியோ கோர் எடுத்து வரும் இந்த முயற்சி, ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும், மறுபுறம் பிம்ப அரசியல் ரீதியாக விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.