கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டு இம்மாடிஹள்ளி பகுதியில், 17 வயது மகளைத் தாய் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவர்ணா என்ற பெண்மணி, தனது மகள் கருண்யாவை வீட்டில் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

மேலும் பின்னர் தானும் அதே அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், இருவரது சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொடூரமான முடிவை சுவர்ணா எதற்காக எடுத்தார் என்பது குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை. 17 வயதான மகள் கருண்யாவின் காதல் விவகாரம் ஏதேனும் இந்த முடிவுக்குக் காரணமாக இருந்ததா அல்லது குடும்பப் பிரச்சினைகள் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் ஒரே வீட்டில் தாயும் மகளும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.