மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தண்ணீர் என நினைத்து தவறுதலாக பெயிண்ட் தின்னரை குடித்த இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். நாக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் பதாதே. கேட்டரிங் தொழில் செய்து வரும் இவர், சமீபத்தில் தனது வீட்டிற்கு வர்ணம் பூசும் பணிகளை மேற்கொண்டார். அப்போது வர்ணம் பூசுவதற்கு பயன்படுத்தப்படும் ‘டர்பென்டைன்’ (Turpentine) என்ற ரசாயன திரவத்தை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் ரூமில் வைத்திருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஷியாம் பதாதேவின் இரண்டு வயது மகன் அத்விக் ஷியாம் பதாதே வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டோர் ரூமிற்கு சென்ற சிறுவன், அங்கிருந்த பாட்டிலில் இருந்த திரவத்தை தண்ணீர் என நினைத்து குடித்ததாகத் தெரிகிறது.
சிறிது நேரத்திலேயே சிறுவனின் உடல்நிலை மோசமடைந்தது. அவன் வலியால் துடிப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த வதோடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வீட்டில் கவனக்குறைவாக வைக்கப்பட்டிருந்த ரசாயன திரவத்தை குடித்து இரண்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
