கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், தந்தை ஒருவரே தனது 6 வயது மகனை ஆற்றில் தள்ளிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகதானா கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் ஆர் கேரி என்பவர், தனது மகன் சித்தார்த் தன்னைப் போலவே இல்லை என்றும், அவன் தனக்குப் பிறக்கவில்லை என்றும் கிராம மக்கள் பேசியதைக் கேட்டு மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.

இந்த சந்தேகத்தின் காரணமாக, கடந்த மார்ச் 16-ஆம் தேதி பள்ளி சேர்க்கைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறி, சிறுவனை மகாராஷ்டிராவின் காரட் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கிருஷ்ணா நதியில் தள்ளிவிட்டுள்ளார். பின்னர், குழந்தையை ஒரு விடுதியில் சேர்த்துவிட்டதாகக் கூறி தனது குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார்.

ஏப்ரல் 1-ஆம் தேதி சிறுவனின் பிறந்தநாளின் போது, அவனைக் காண வேண்டும் என்று தாய் பிடிவாதம் பிடித்ததால் மல்லிகார்ஜுன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவிட்டு வீட்டில் இருந்து தப்பியோடினார்.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் மல்லிகார்ஜுனைப் பிடித்து விசாரித்தபோது அவர் செய்த கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மார்ச் 16-ஆம் தேதியே மகாராஷ்டிரா போலீசார் ஆற்றில் இருந்து ஒரு சிறுவனின் உடலை மீட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

புகைப்படங்கள் மூலம் அது சித்தார்த் தான் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, போலீசார் அந்த கல்நெஞ்சம் படைத்த தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு வதந்தியை நம்பி பெற்ற மகனையே தந்தை கொன்ற சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.