சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் நேரிட்ட பயங்கர பாய்லர் வெடிப்பு விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த விரிவான விவரங்கள் வருமாறு, சக்தி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையத்தில், செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு பாய்லர் எதிர்பாராதவிதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த வெடிப்புச் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், உயிருக்குப் பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆலையைச் சுற்றி கரும்புகை சூழ்ந்ததால் பெரும் பதற்றம் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 18 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மற்றவர்கள் மேல் சிகிச்சைக்காக ராய்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாய்லர் வெடித்ததற்கான சரியான காரணம் குறித்து ஆலை நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நேரிட்டதா அல்லது பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தக் கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.