மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அவரது பேச்சு அரசியல் சாசன பதவிப் பிரமாணத்திற்கு எதிரானது என்று தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் மத்திய அரசு இந்த நாடாளுமன்றத் தொடரிலேயே தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் வகையிலோ அல்லது வட மாநிலங்களுக்குக் கூடுதல் அரசியல் வலிமையை வழங்கும் வகையிலோ அமைந்தால், நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.
அப்படி ஏதேனும் நடந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். மத்திய அரசுக்கு இது எனது எச்சரிக்கை” என்று அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த கருத்துக்குப் பதில் அளித்துள்ள பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை கூறியதாவது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பிரதமரை மிரட்டும் விதமாகவும், தமிழகம் மீண்டும் 1960-களுக்குத் திரும்பிவிடும் என்று கூறுவதும் அச்சமூட்டும் செயலாக உள்ளது.
பெண்களுக்கு உரிய மரியாதையையும், அதிகாரத்தையும் வழங்கவே பிரதமர் மோடி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2023 செப்டம்பர் மாதமே இந்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே பிரதமர் இதனைத் துரிதப்படுத்துகிறார்.
மக்களவை இடங்களின் எண்ணிக்கை மக்கள் தொகை அடிப்படையில் அதிகரிக்கப்படும் என்று எங்குமே கூறப்படவில்லை. வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி வரவுள்ள மசோதாவைப் படிக்கும் முன்பே, மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை முதல்வர் உருவாக்குவது கண்டிக்கத்தக்கது. இது அவர் முதலமைச்சராகப் பதவியேற்றபோது எடுத்த பதவிப் பிரமாணத்திற்கு எதிரானது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் தொகுதி மறுவரையறை குறித்த இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
