மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வரவும் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஒரு புதிய அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளன. பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ‘ஐந்து அம்சத் திட்டம்’ வெளியிடப்பட்டது.
மேலும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதில் பாகிஸ்தான் காட்டும் முயற்சிகளுக்கு சீனா தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. இரு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள இந்த முன்முயற்சியானது, பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் ஆசிய நாடுகளின் முக்கியத்துவத்தை உலக அரங்கில் பறைசாற்றுகிறது.
இந்த அமைதித் திட்டத்தின் கீழ் ஐந்து முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன: முதலாவதாக, போரில் ஈடுபட்டுள்ள தரப்புகள் உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்தி போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டாவதாக, அமைதிப் பேச்சுவார்த்தைகளை விரைவாகத் தொடங்கி, ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும்.
இதனால் மூன்றாவதாக, பொதுமக்கள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் போன்ற சிவிலியன் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும். நான்காவதாக, உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இறுதியாக, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி ஒரு விரிவான அமைதி கட்டமைப்பை உருவாக்கி, சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நீடித்த அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
