ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அசத்தியுள்ளது. வான்கடேவில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மும்பையை அதன் சொந்த மண்ணிலேயே ஆர்சிபி வீழ்த்தியிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீசனில் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியைத் தழுவியுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா மிகுந்த அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில், மும்பை அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் ஹர்திக் பாண்டியா வீரர்களிடம் மிகத் தீவிரமாகப் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிப் புயலைக் கிளப்பியுள்ளது.

 

அந்த வீடியோவில், “பந்துவீச்சாளர்களுக்கு இது கடினமான காலம் தான். பும்ரா மற்றும் சான்ட்னர் சிறப்பாகச் செயல்பட்டனர். குறிப்பாகச் சான்ட்னர் ரன்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார்” என்று கூறி அவருக்கு மெடல் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து வீரர்களை எச்சரிக்கும் தொனியில் பேசிய அவர், “நமக்கு முன்னால் இரண்டு வழிகள் தான் உள்ளன.

ஒன்று, அறைக்குச் சென்று எங்கே தவறு நடக்கிறது என்பதைச் சிந்திப்பது. தோல்வி என்பது தோல்வி அல்ல, அது ஒரு பாடம். ஹோட்டலுக்குச் சென்ற பிறகு நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவோம், அங்கு கிரிக்கெட் குறித்து விவாதித்து இதற்கான தீர்வை எட்ட வேண்டும்” என அதிரடியாகப் பேசியுள்ளார்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மும்பை அணி பின்தங்கியிருப்பதாகத் தெரிவித்த பாண்டியா, சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.