உகாண்டா ராணுவத் தளபதி ஜெனரல் முஹூசி கைனெருகாபா, துருக்கி நாட்டிற்கு விடுத்துள்ள வினோதமான கோரிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் நிலவும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் உகாண்டா ராணுவம் ஆற்றிய பங்களிப்பிற்காக, துருக்கி அரசாங்கம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

மேலும், இதற்கு கைமாறாக அந்நாட்டின் மிக அழகான பெண்ணைத் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அதிரடி நிபந்தனையையும் அவர் முன்வைத்துள்ளார். இந்தக் கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் துருக்கி நிறைவேற்றத் தவறினால், உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உள்ள துருக்கியத் தூதரகம் மூடப்படும் என்றும், உகாண்டா வான்வெளியில் ‘துருக்கி ஏர்லைன்ஸ்’ விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனியின் மகனான முஹூசி, இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பது இது முதல் முறையல்ல என்றாலும், ஒரு நாட்டின் உறவை மணம் மற்றும் பணத்திற்காகப் பணயம் வைக்கும் இவரது செயல் தற்போது உலக அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.