இந்தியத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தங்கள் தலைகளில் கேமராக்களை மாட்டிக்கொண்டு வேலை செய்யும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்லா மற்றும் ஃபிகர் ஏஐ போன்ற உலகளாவிய நிறுவனங்கள் மனிதர்களைப் போலவே செயல்படும் ‘ஹுமனாய்டு’ ரோபோக்களை உருவாக்கத் தீவிரமாக முயன்று வரும் நிலையில், அதற்கான தரவுகளை சேகரிக்கவே இந்த வினோத முறை கையாளப்படுகிறது.

தொழிலாளர்களின் ஒவ்வொரு கை அசைவு, நுணுக்கமான வேலைகள் மற்றும் அவர்கள் கையாளும் யுக்திகளை இந்த கேமராக்கள் பதிவு செய்கின்றன. இதன் மூலம் மனிதர்கள் செய்யும் வேலையை அப்படியே ரோபோக்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றனர்.

சுருக்கமாகச் சொன்னால், தங்களை வேலையை விட்டுத் தூக்கப்போகும் ரோபோக்களுக்கு, தொழிலாளர்களே தங்கள் கையால் பயிற்சி அளிக்கும் ஒரு விசித்திரமான மற்றும் கவலையளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக்ரோ1 போன்ற நிறுவனங்கள், இந்தியா உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களை இதற்காக நியமித்துள்ளன.

 

சலவை செய்தல், பாத்திரம் கழுவுதல் மற்றும் சமையல் செய்தல் போன்ற அன்றாட வீட்டு வேலைகளை ஐபோன் மூலம் பதிவு செய்து அனுப்பும் இந்த ‘ரோபோடிக்ஸ் ஜெனரலிஸ்டுகளுக்கு’ மாதம் சுமார் ரூ.19,000 முதல் ரூ.21,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

நாள் முழுவதும் கேமராவைத் தலையில் சுமந்து கொண்டு ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வது, கண் எரிச்சல் மற்றும் மணிக்கட்டு வலி போன்ற உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், வருங்காலத்தில் இந்த ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது தங்கள் வாழ்வாதாரம் என்னவாகும் என்ற அச்சத்தையும் தொழிலாளர்கள் மத்தியில் விதைத்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் வியக்க வைத்தாலும், அது சாமானிய மனிதர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் ஆயுதமாக மாறுகிறதா என்ற கேள்வி உலகளவில் வலுத்துள்ளது.