பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, தனது பேட்டின் அளவை பரிசோதித்த நடுவர்களுடன் ரோகித் சர்மா அதிருப்தியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஆர்சிபி – மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டத்தின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அதிரடி ஆட்டத்தின் போது, ஐபிஎல் விதிகளின்படி வீரர்களின் பேட் பரிமாணங்களை நடுவர்கள் அவ்வப்போது சோதிப்பது வழக்கம்.
அதன்படி ரோகித் சர்மாவின் பேட்டை நடுவர்கள் சோதித்த போது, அது விதிகளுக்கு உட்பட்டு இல்லை என முதலில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரோகித், தனது பேட்டில் எந்தக் குறையும் இல்லை என நடுவர்களுடன் நீண்ட நேரம் விவாதித்தார். திலக் வர்மாவும் ரோகித்திற்கு ஆதரவாகப் பேசினார். இறுதியில், நடுவர் கருவியைத் தவறாகப் பிடித்ததே குழப்பத்திற்கு காரணம் எனத் தெரியவந்தது. அதன்பின் பேட் தகுதியானது என அறிவிக்கப்பட்ட பிறகே ரோகித் நிம்மதியடைந்தார்.
बल्ले की मोटाई की जांच करते समय रोहित शर्मा अंपायर पर गुस्सा हो गए 😭 pic.twitter.com/IRzlXREYmP
— ममता ट्राबल (@Mamtasulaniya) April 12, 2026
241 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடியாக ஆடத் தொடங்கிய ரோகித் சர்மாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் பாதியிலேயே (Retired Hurt) முறையில் வெளியேறினார்.
ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 31 பந்துகளில் 9 சிக்சர்களுடன் 71 ரன்கள் குவித்து கடைசி வரை போராடினார். ஹர்திக் பாண்டியா 40 ரன்களும், ரையான் ரிகெல்டன் 37 ரன்களும் எடுத்தனர். இருப்பினும், மும்பை அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. மேலும் முன்னதாக ஆர்சிபி தரப்பில் பில் சால்ட் (78), ரஜத் படிதார் (53), விராட் கோலி (50) ஆகியோர் விளாச 240 ரன்கள் குவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை அணிக்கு இது தொடர்ச்சியான 3-வது தோல்வியாகும்.
