மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டிம் டேவிட், விமான நிலையத்தில் தன்னை நெருங்கி செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை பறித்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியினர் கௌஹாத்தியில் இருந்து மும்பை திரும்பினர். விமான நிலையத்திலிருந்து டிம் டேவிட் தனது காரை நோக்கிச் சென்றபோது, ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். அப்போது ரசிகர் ஒருவர், டிம் டேவிட்டின் கையைப் பலமாகப் பிடித்து இழுத்து, மிகவும் நெருக்கமாக வந்து செல்ஃபி எடுக்க முயன்றார்.
எதிர்பாராத இந்த உடல் ரீதியான அத்துமீறலால் ஆத்திரமடைந்த டிம் டேவிட், அந்த ரசிகரின் செல்போனை பிடுங்கினார். சிறிது நேரம் அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், பின்னர் அந்த செல்போனை மீண்டும் அவரிடமே ஒப்படைத்தார். மேலும், இதுபோன்ற செயல்கள் முறையற்றவை என சைகை மூலம் காட்டிவிட்டு அங்கிருந்து காரில் ஏறிச் சென்றார்.
மேலும் சமீபத்தில் இதேபோல இஷான் கிஷன் மற்றும் ஒரு ரசிகருக்கு இடையே விமான நிலையத்தில் மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில், தற்போது டிம் டேவிட் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. பிரபலங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு ரசிகர்கள் மதிப்பு அளிக்க வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tim David respectfully gave back the phone to a fan who came too close to Tim and asked for a selfie. pic.twitter.com/gRG9JJuH0e
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 12, 2026
