மலையாள திரையுலகின் ஈடுஇணையற்ற மெகா ஸ்டார் மம்மூட்டி, தனது 55 ஆண்டுகால திரைப்பயணத்திலும் இன்றும் அதே வேகத்துடன் உழைப்பதன் பின்னணியில் உள்ள ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “முகேஷ் அம்பானி எதற்காக இன்னும் இவ்வளவு கோடிகளைச் சம்பாதித்துக் கொண்டே இருக்கிறார்? அவர் சம்பாதிக்கும் எல்லாப் பணத்தையும் அவரே பயன்படுத்தப் போவதில்லை.
அதேபோல் 90 அல்லது 100 வயதாகும் அரசியல்வாதிகள் ஏன் இன்னும் பதவியில் இருக்கத் துடிக்கிறார்கள்? இதற்கெல்லாம் காரணம் அவர்களுக்கு அதில் கிடைக்கும் ஒருவித மகிழ்ச்சி (Pleasure) தான்.
இதை ஒருவகையில் ‘பேராசை’ என்றும் சொல்லலாம்; இது மனித இயல்பு. என்னிடம் இருக்கும் வசதிகளுக்கு மேல் எனக்குப் பணம் தேவையில்லை, ஆனாலும் நான் நடிப்பது எனக்குப் பிடிக்கும் என்பதால் தான்,” என்று அம்பானியுடன் தன்னை ஒப்பிடாமல் மனித மனதின் ஆசையை விளக்கினார்.
மேலும், மறைந்த மூத்த நடிகர் எம்.ஆர். ராதா அவர்களின் அபாரமான நடிப்புத் திறமை குறித்துப் பேசிய மம்மூட்டி, “எம்.ஆர். ராதா அவர்கள் உடல்நலக் குறைவால் நடக்கக் கூட இரண்டு பேரின் உதவி தேவைப்பட்ட காலத்திலும், கேமரா முன்னால் நின்றால் ஒரு புதிய ஆற்றல்மிக்க மனிதராக மாறிவிடுவார்.
‘ஆக்ஷன்’ என்று சொன்னவுடன் தன்னைத் தாங்கிப் பிடித்தவர்களின் கைகளைத் தட்டிவிட்டு வீர நடை போட்டு நடித்து அசத்துவார்,” என்று நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
