நடிகர் விஜய்யின் கடைசி படமாக எதிர்பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் முன்பே இணையத்தில் எச்டி (HD) தரத்தில் லீக்காகி ஒட்டுமொத்தத் தமிழ் சினிமாவையும் அதிர வைத்துள்ளது.

சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், சென்சார் பிரச்சினைகளால் தள்ளிப்போன நிலையில், தற்போது இணையத்தில் கசிந்திருப்பது தயாரிப்பு தரப்பை நிலைகுலையச் செய்துள்ளது.

இதுகுறித்து இயக்குநர் அமீர் அதிரடியான ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். இந்தப் படம் லீக் ஆனதற்கு சென்சார் வாரியம் காரணமில்லை என்றும், படத்தின் எடிட்டர்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுவாக சென்சார் வாரியத்திற்கு அனுப்பப்படும் பிரதிகளில் ‘Censor_Copy’ என்ற வாட்டர்மார்க் இருக்கும், ஆனால் லீக் ஆன வீடியோவில் ‘EDIT_REF’ என்று இருந்ததே இதற்குக் காரணம் என அவர் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக 21 பேர் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தத் திருட்டுத்தனமான செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு விஜய் படத்திற்கு எதிராகச் சதி செய்யப்படுவதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். கசிந்த வீடியோக்களைப் பார்க்க வேண்டாம் எனவும், தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது.